Pages

Sunday, November 6, 2011

சகலகலா வல்லவனாக

அறிவின் ஆழம் புரியட்டும்
சகலகலா வல்லவனாக வேண்டும் எனும் ஆர்வம் இன்று பலரிடம் காணப்படுகிறது. ஒரு விடயத்தைக் கற்க ஆரம்பிப்பார்கள். நண்பனிடம் இன்னொரு திறமை இருக்கும். அதை நோக்கி மனம் தாவும். அதைக் கற்க ஆரம்பிக்கும் போது இன்னொன்றில் மனம் லயிக்கும். அதன்பின் வேறொன்றுக்குத் தாவும். கடைசியில் நமது தனித்துவம் எது என்பது பிரித்தறிய முடியாக் கூட்டாஞ்சோறாகிப் போகும்.

கொஞ்சம் ஆற அமர உட்கார்ந்து உங்களுடைய நல்ல திறமை எதில் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். சட்டென ஒரு விடயம் உங்களுக்குத் தோன்றினால் உண்மையிலேயே உங்களுடைய திறமையை நீங்கள் அறிந்து வைத்திருக்கிaர்கள் என்று அர்த்தம். அந்தத் திறமை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கவிதை எழுதுவதாகவோ தேனீர் போடுவதாகவோ.... எதுவாகவும் இருக்கலாம்.

ஒருவேளை நீங்கள் யோசிக்கும்போது ஒரு விடயமும் உங்களுக்குப் பிடிபடாமல் போனால் விழித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு இருக்கும் திறமைகளை எல்லாம் பட்டியலிட்டு எதில் நீங்கள் வல்லவர். எதில் நீங்கள் சுமார். எது உங்களுக்குப் பிடிக்கவே பிடிக்காத விடயம் என வரிசைப்படுத்துங்கள். அந்தப் பட்டியலைப் பார்க்கும்போது ‘இதுதான் என்னோட தனித்துவம் என உங்களுக்கே ஒரு விடயம் நிச்சயம் பிடிபடும்.

உங்களுடைய உண்மையாக விருப்பம் இருக்கும் விடயத்தில் உங்களுக்கு இயல்பாகவே திறமையும் இருக்கும். அந்தப் பகுதியில் நீங்கள் மூச்சடக்கி, முக்குளித்து முத்தெடுக்க வேண்டும். அது நிச்சயம் உங்களை வெற்றிகளின் உச்சியில் கொண்டு சேர்க்கும்.

நீங்கள் தேர்வு செய்யும் விடயம் குறித்த தகவல்களையும், விடயங்களையும் தேடித் தேடிப் படிப்பது அடுத்த கட்டம். வெறுமனே வாசிப்பது மட்டுமல்லாமல் அது குறித்த சிந்தனைகளிலும் அதிகம் ஈடுபடுங்கள். குறிப்பாக ஒரு பாடகராக மாறுவது உங்கள் இலட்சியம் என்றால் அது குறித்த நூல்களைப் படியுங்கள். பாடகர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படியுங்கள்.

அவை உங்களுக்குத் தூண்டுதலாய் மாறும். அதே துறையில் விருப்பமுடைய நண்பர்களைக் கொண்டிருப்பது அடுத்த தேவை. அந்தத் துறையில் திறமை மிக்கவர்கள் நண்பர்களாகக் கிடைத்தால் நல்லது. யாராவது ஒரு நல்ல நபர் வழிகாட்டியாய்க் கிடைத்தால் மிக மிக நல்லது. நல்ல உற்சாகமூட்டக்கூடிய வழிகாட்டி இலட்சியப் பாதையில் உங்களைச் சுமந்து செல்லும் ஒரு குதிரையைப் போன்றவர்.

இன்றைக்கு இணையம் பல்வேறு குழுக்களையும் சமூக வலைத்தளங்களையும் நமக்கு முன்னால் நீட்டுகிறது. இசைப் பிரியர்கள் அதற்கான குழுக்களில் இணையலாம். தையல் பிரியர்கள் அதற்கான குழுக்களில் இணையலாம். இங்கே அரட்டைகளைத் தவிர்த்த உருப்படியான பல விடயங்கள் பரிமாறப்படும்.

உங்களுக்குப் பிடித்தமான விடயமே வேலையாகிப் போனால் வாழ்க்கையில் ஒருநாள் கூட வேலை செய்யும் உணர்வே வராது’ என்கிறார் கன்பூஷிஸ்.

எதை அபரிமிதமாக நேசிக்கிறோமோ அது நமது உணர்வுகளில் பின்னிப் பிணைந்து நம்மை மாபெரும் வெற்றியா ளராய் கொண்டு சேர்க்கும். வின்சென்ட் வான்கா எல்லாவற்றையும் விட அதிகமாய் ஓவியத்தை நேசித்தார். ஓவியம் வரைய அமர்ந்தால் சாப்பிடவே மறந்துபோய் விடுவாராம். தனது தூரிகையிலிருந்து விழும் ஒவ்வொரு துளியையும் நேசித்ததால்தான் இன்று ஓவிய உலகம் அவரை கொண்டாடுகிறது.

No comments:

Post a Comment